×

12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்: தேர்வுத்துறை அறிவிப்பு

சென்னை: 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 9ம் தேதி வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார். 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் 7,19,196 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 3,93,890 மாணவிகளும், 3,25,305 மாணவர்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட 4.07 சதவீதம் மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் திருப்பூர் மாவட்டம் (97.45%) முதலிடம் பிடித்துள்ளது. சிவகங்கை, ஈரோடு மாவட்டங்கள் (97.42%) 2ம் இடமும், அரியலூர் (97.25%) 3ம் இடமும் பிடித்துள்ளது. தமிழகத்தில் குறைந்தபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 90.47% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 9ம் தேதி வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அந்தந்த பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மே 9 முதல் மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழை கல்லூரியில் சேர பயன்படுத்திக் கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் அடுத்த மாதம் முதல் மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். மறுமதிப்பீடும், மறு கூட்டலுக்கு மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். துணைத் தேர்வுகள் குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.

The post 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்: தேர்வுத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Selection Department ,Tamil Nadu ,Sethurama Varma ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...